விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் ஊதிய உயர்வு: சுமூகத்தீர்வு காண கோரிக்கை

கடந்த 23.10.2019 அன்று ஏற்பட்ட மூன்றாண்டு கால ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. ஆகவே, புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியுள்ளது

Update: 2022-10-13 17:00 GMT

சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.ஈஸ்வரமூர்த்தியிடம் மனு அளித்த ஏஐடியுசி ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தினர்

சென்னிமலை விசைத்தறி தொழிலாளர்கள் - போனஸ், ஊதிய உயர்வு கோரிக்கைகள் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணக் கோரி  ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர்(ஏஐடியுசி) சங்கத்தின் சார்பில்  மா.நாகப்பன் தலைமையில், ஒன்றியத் தலைவர் என்.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில்  சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.ஈஸ்வரமூர்த்தியிடம்   மனு அளித்தனர்.

அந்த மனு விவரம்: சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு தொடர்பாக, சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும், அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவிற்கும் கடந்த 23-10-2019 அன்று ஏற்பட்ட மூன்றாண்டு கால ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. ஆகவே, புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான முறையில் 6-10-2022 அன்று நடைபெற்ற எமது சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கோரிக்கைகளை கீழே கொடுத்துள்ளோம்

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வாழ்க்கை செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தின் உண்மை மதிப்பு குறைந்து பற்றாக்குறையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நெருக்கடியான நிலையைக் கருத்தில் கொண்டு, பின்வரும் கோரிக்கைகளை முன்வைப்பதென பேரவைக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்: அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 2021-2022 ஆம் ஆண்டுக்கான போனஸாக, அவர்கள் ஈட்டிய சம்பளத்தில் 25% (இருபத்தி ஐந்து சதவிகிதம்) வழங்க வேண்டும். அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வாக தற்போது பெற்று வரும் ஊதியத்தில் 40% (நாற்பது சதவிகிதம்) உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து விசைத்தறி தொழிலாளர்க ளுக்கும் தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டப்படி வருடத்திற்கு 9 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்க வேண்டும்.

விசைத்தறி தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கான பிரீமியத் தொகையை விசைத்தறி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்தி, தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே போனஸ் வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் அதிக அளவில் உள்ளன. . திருப்பூா் மாவட்டத்தில் நாடா இல்லாத விசைத்தறிகள் 50 ஆயிரம் உள்ளன. இதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.50 கோடி மதிப்பிலான 1 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 45 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு, நூல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு, தற்போது மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு அறிவித்த 32 சதவீத மின் கட்டணம் உயர்வு காரணமாக மீண்டும் விசைத்தறி தொழில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தமிழக அரசு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்பதே விசைத்தறி தொழிளாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags:    

Similar News