ஈரோடு மருத்துவக்கல்லூரியில் நாளை முதல் தடுப்பூசி போடுவது நிறுத்தம்: கலெக்டர் உத்தரவு
பெருந்துறையில் உள்ள, அரசு ஈரோடு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில், நாளை முதல் தடுப்பூசி போடும் பணியை நிறுத்துமாறு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியிலும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதனிடையே, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது கொரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டது. இதனால் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக ஏராளமானோர் வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருப்பூர்,நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் நோயாளிகளுடன் உறவினர்களும் வருவதால், மருத்துவமனை வளாகத்தில் சமூக இடைவெளியில்லாமல் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஈஓடு மாவட்ட கலெக்டர் கதிரவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் (03.06.21) பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்.
அதற்கு பதிலாக இனி, பெருந்துறை அரசு மருத்துமனையில் தடுப்பூசி போடப்படும். பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு கொரோனா சிகிச்சை பெற நோயாளிகள் மட்டுமே வர வேண்டும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.