3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்
3 வேளாண் சட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற தொடரில் ரத்து செய்யப்படும் என ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாய சங்கங்களின் கோரிக்கை மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாய சங்கங்களின் கோரிக்கை மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மாநாட்டில் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மு.க.ஸ்டாலின் சுடர்விளக்கு ஏற்றி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும், உயர்மின் கோபுரங்கள், கெயல், IDPL திட்டங்களை இனி சாலையோரங்களில் கேபிளாக அமைக்க வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்பட 15 தீர்மானங்களை விவசாயிகள் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர். இதனையடுத்து விவசாயிகள் விராலி மஞ்சள் சிறு தானிய இனிப்புகள், சென்னிமலை போர்வைகள், பவானி ஜமுக்காளம் ஆகியவற்றை நினைவுப்பரிசாக மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார். தொடர்ந்து மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், 100 நாட்களுக்குள் விவசாயிகள் அளித்த கோரிக்கைகளை எது முடியுமோ அதை நிறைவேற்றப்படும் என்றும் மற்றதை அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்து தீர்க்கப்படும் என்றார்.
திமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வதாரம், நில உரிமை காக்கப்படும் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் செய்த நன்மைகளை பட்டியலிட்டார். மேலும் விவசாயிகள் கோரிக்கை வைக்காமல் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை கருணாநிதி் செயல்படுத்தினார் என்றார். தன் மீதான ஊழலிலிருந்து தப்பித்து கொள்ளவே விவசாயிகளை தரகர் என கேவலமாக சித்திகரிப்பதாகவும் தெரிவித்தார். தனக்கு விவசாயம் தெரியாது என்றும் ஆனால் மக்கள் மீதும், மண் மீதும் பாசம் உண்டு, மு.க.ஸ்டாலின் விவசாயியாக இருந்தால் மட்டும் விவசாயிகள் பிரச்சனை தெரிய வேண்டும் என அவசியமில்லை என்றும் நெஞ்சில் ஈரம் இருந்தால் போதும், எனக்கு அந்த ஈரம் உண்டு என்றார். 3 வேளாண் சட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற தொடரில் ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலின் விவசாயிகளின் கோரிக்கைளை நிறைவேற்றவும், கொள்கையை ரீதியாக முடிவு எடுக்கவும், விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார்.