திருப்பூரிலிருந்து ஈரோடு வந்த ஏடிஎம் இயந்திரம்

Update: 2021-03-01 11:15 GMT

திருப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் ஈரோட்டில் கண்டெடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மூங்கில்பாளையம் பிரிவு என்ற இடத்தில் ஒரு வாகனம் கேட்பாரற்று நின்றதை போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து வாகனம் குறித்து மேற்கொண்ட விசாரணையில் பெருந்துறை அருகே ஈங்கூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் வாகனத்தை மர்மநபர்கள் திருடி சென்று ஏடிஎம் கொள்ளைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இந்நிலையில் இன்று பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில், உள்ள காலி நிலத்தில் உடைக்கப்பட்டு சிதறி கிடந்த ஏடிஎம் இயந்திரத்தை கண்டெடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்குளியில் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து திருட்டு வாகனத்தின் மூலம் கொண்டு வந்த கொள்ளையர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு வேறு வாகனத்தில் தப்பி சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊத்துக்குளி, காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News