ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் இன்று தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

Update: 2021-10-27 06:30 GMT

இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கை:  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண,  சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, கண்காணிப்பு மற்றும் தீர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் சிறப்பு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களுக்கு உள்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் 27-ந் தேதி (இன்று) முதல்,  வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தாலுகா வாரிய துணை கலெக்டர் நிலை அதிகாரி தலைமையில் மண்டல துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று தமிழ்நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்வார்கள். கணினி மூலம் எளிய திருத்தங்கள் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளின்போது அனைத்து கிராம மக்களும் பட்டா மாறுதல் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக இன்று (புதன்கிழமை) முகாம் தொடங்குகிறது. தொடர்ந்து,  வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் நடத்தப்படும். எந்த கிராமங்களில் எந்த தேதியில் முகாம் நடக்கிறது என்பதை அந்தந்த தாலுகா தாசில்தார்கள் அறிவிப்பார்கள். இந்த முகாம்களை விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள் முறையாக பயன்படுத்தி பட்டா மாறுதல் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News