வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து நாளை மறுநாள் (மார்ச்.05) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து நாளை மறுநாள் (மார்ச்.05) ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், புதிய ஆயக்கட்டு 2,924 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கு 05.03.2023 முதல் 12.06.2023 வரை 100 நாட்களுக்கு வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 108.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்மூலம், வரட்டுப்பள்ளம் அணையின் புதிய ஆயக்கட்டு பகுதிகளான சங்கராபாளையம், எண்ணமங்கலம் மற்றும் மைக்கேல்பாளையம் கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாக 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (மார்ச்.03) வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.78 அடியாகவும், நீர் இருப்பு 133.180 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.