ஆப்பக்கூடல் அருகே ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே கரட்டுப்பாளையத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று (ஜன.9) நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.;

Update: 2025-01-09 04:45 GMT

ஆப்பக்கூடல் கரட்டுப்பாளையத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மீதித்தனர்.

ஆப்பக்கூடல் அருகே கரட்டுப்பாளையத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று (ஜன.9) நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

அதன்படி, இந்தாண்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி திருப்பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஜனவரி 1ம் தேதி கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியும், 6ம் தேதி சந்தன காப்பு நிகழ்ச்சியும், 7ம் தேதி பச்சை பூஜையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.8ம் தேதி) பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் குடம் எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று (ஜன.9) காலை 60 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்யப்பட்டது.

முதலில் பூஜைகள் செய்து பூசாரி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில், ஆப்பக்கூடல், புதுப்பாளையம், சுக்காநாயக்கனூர், ஓசைபட்டி, முனியப்பன்பாளையம், வேம்பத்தி, வெள்ளாளபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

மேலும், இத்திருவிழாவையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தொடர்ந்து, 11ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் ஊஞ்சலாட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News