அந்தியூர் அருகே திருவிழாவிற்கு வந்தவர் யானை துரத்தியதில் படுகாயம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாளக்கரையில் யானை துரத்தியதில் கீழே விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட முரளி பிரிவு, தாளக்கரையில் கோவில் திருவிழா நடைபெற்றது. இக்கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த சுண்டப்பூரை சேர்ந்த முருகன் (வயது 41) என்பவர் தாளக்கரையிலுள்ள தனது உறவினரின் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது தாளக்கரை பொட்டியாளா என்ற இடத்தில் மறைந்திருந்த யானை முருகனை துரத்தியது.
இதில் கீழே விழுந்ததில் இடுப்பு மற்றும் கால் பகுதியில் முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த அந்தியூர் வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முருகனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.