செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா: பவானியில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்து மாற்றம்
செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் பவானி நகரில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.;
செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா போக்குவரத்து மாற்றம்.
செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பவானி நகரில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கர்ப்ப கிரகத்தில் உள்ள செல்லியாண்டியம்மன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்ய தொடங்கி, இன்று மதியம் 12 மணி வரை இந்த நிகழ்வு நடந்தது.
இதைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. இதையொட்டி, பவானி நகரில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
மேட்டூரில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் ஊராட்சிக் கோட்டை, காடையாம்பட்டி தளவாய்பேட்டை, சின்னப்புலியூர், லட்சுமி நகர் வழியாக ஈரோடு செல்ல வேண்டும். அதேபோல் சேலம், நாமக்கல், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து பவானி வரும் அனைத்து வாகனங்களும் லட்சுமி நகர் வழியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வந்து அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு திருப்பி விடப்படும். கனரக வாகனங்கள் நாளை காலை முதல் இரவு 10 மணி வரை நகர எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.