நம்பியூர் அருகே ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி படுகாயம்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் புதுமண தம்பதியர் சென்ற ஆம்னி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி வேன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நீலகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசண்முகம் மகன் கோபிநாத். இவருக்கும் நம்பியூர் கூடங்கரை பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி மகள் புஷ்பராணி என்பவருக்கு இன்று காலை கூடக்கரையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து புதுமண தம்பதியருடன் அவர்களின் உறவினர்களான, நெகமத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, திபவர்ஷினி, திங்களூரை சேர்ந்தை மணி மற்றும் ஈரோட்டை சேர்ந்த மணி ஆகியோர் மணமகன் ஊரான நீலக்கவுண்டன்பாளையத்திற்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஆம்னி வேனை மணமகளின் தந்தையான வெள்ளிங்கிரி ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது, நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி வேனில் வந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.