பவானி: மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி பலி
பவானி அருகே பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 68). சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரி வெள்ளித்திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தனது பேரன் பிரகாஷ் (வயது 23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி அருகே மயிலம்பாடி-ஒலகடம் ரோட்டில் சென்று போது திடீரென நாய் குறுக்கே வந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஈஸ்வரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பின்பக்கம் காயம் ஏற்பட்டது. பிரகாசுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈஸ்வரி பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.