ஈரோட்டில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20½ பவுன் நகை திருடிய கொள்ளையன் கைது
ஈரோட்டில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20½ பவுன் நகையை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட வெங்கையா.
ஈரோட்டில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20½ பவுன் நகை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு சூரம்பட்டி என்ஜிஜிஓ காலனி 7வது வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 59). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் வெளியே சென்றவர் மாலையில் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வேகமாக வெளியேறினார். இதை பார்த்த பன்னீர்செல்வம் அந்த நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரை தள்ளிவிட்டு அந்த மர்ம நபர் தான் வந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.
இதையடுத்து பன்னீர்செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அவற்றில் வைக்கப்பட்டு இருந்த 20½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர். அதில் அந்த பகுதியை விட்டு திருடன் வெளியேறவில்லை என்று உறுதி செய்தனர்.
இதையடுத்து, அதே பகுதியில் உள்ள முட்புதரில் காட்டில் திருடன் மறைந்து படுத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், அவர் மறைத்து வைத்திருந்த நகையையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவரை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அவர். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசராவ்பெட் பகுதியை சேர்ந்த ராயபாட்டை என்கிற வெங்கையா (வயது 48) என்பதும், பன்னீர்செல்வம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றதை நோட்டமிட்ட அவர், வீடு புகுந்து நகை திருடியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வெங்கையாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திருட்டு, கொலை உள்பட மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.