ஈரோடு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்த காரால் பரபரப்பு
ஈரோடு அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவரின் வீடு சாலையோரம் அமைந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் ரேவதி, அவரது தாயார், ரேவதியின் 2 மகள்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் அந்த வழியாச் சென்ற சொகுசு கார் திடீரென தறிகெட்டு ஓடி ரேவதி வீட்டின் முன் பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி அவரது வீட்டு முன் பகுதியில் இருந்த செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு சைக்கிள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திடீரென கார் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ரேவதி வெளியே வந்து பார்த்த போது தனது வீட்டின் முன் பகுதியில் கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காருக்குள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் சிக்கி காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் காரில் இருந்த நபர் ஈரோடு சக்திநகர் பகுதியைச் சேர்ந்த வருண் (24) என்பதும், மதுபோதையில் காரை இயக்கியது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.