கோபி அருகே பவானி ஆற்றில் குளிக்கும்போது மாயமான பட்டதாரி சடலமாக மீட்பு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்கும்போது மாயமான பட்டதாரி வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார்.;

Update: 2025-01-19 12:45 GMT

யோகேஸ்வரன் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்.

கோபி அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்கும்போது மாயமான பட்டதாரி வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். 

திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி கூத்தம்பாளையம் பிரிவை சேர்ந்த ரவி மகன் யோகேஸ்வரன் (வயது 27). பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றுக்கு நண்பர்களுடன் யோகேஸ்வரன் நேற்று குளிக்க வந்துள்ளார்.

அப்போது, ஆற்றில் குளித்து கொண்டு இருந்த யோகேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். நண்பர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், அங்கு இருந்தோர் கோபி தீயணைப்பு நிலையம், பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு, வந்த கோபி தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை வரை தேடியும் யோகேஸ்வரன் கிடைக்கவில்லை. பின்னர், இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை மீண்டும் நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர்.

அப்போது, குளிக்க சென்ற இடத்தின் அருகே வண்ணாந்துறை என்ற இடத்தில் யோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். இதை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News