பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் கூட பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் கூட பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.;

Update: 2024-03-05 04:30 GMT

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி.

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் கூட பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழ் நாடு முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு காளை மாடு சிலை அருகே சிம்னி ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

எம்பி கனிமொழி சிறப்புரை ஆற்றிய போது மசூதியில் இருந்து தொழுகை ஒலி கேட்டவுடன் தனது உரையை நிறுத்தினார். பின்னர் தனது உரையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மதவாதத்தை புகுத்தி அரசியல் செய்கின்றனர். மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை நடந்தும் மணிப்பூர் சென்று நடந்த கொடுமைகளை கேட்க பிரதமருக்கு நேரமில்லை. பிரதமர் மோடி தமிழ்நாடு அடிக்கடி வந்தாலும் தமிழ்நாட்டில் குடியேறினாலும் கூட தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்று கலைஞர் விரும்பியதால் மாவட்டம் தோறும் அரசு மருத்துவ கல்லூரி ஏற்படுத்தினார். ஆனால் தமிழ்நாட்டு பிள்ளைகள் பயன்படுத்தி முன்னேற கூடாது என கருதி நீட் தேர்வை கொண்டு வந்து தடை போட்டனர். இட ஒதுக்கீடு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு அமுல்படுத்தபடும் என கூறிய மோடி, மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமா?. அதன் பின்பு இட ஒதுக்கீடு சொல்லி ஏமாற்றி வருகின்றனர்.

பண மதிப்பிழப்பு செய்த போது வங்கி வாசலில் நின்று மாண்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டு வந்து அதையும் செல்லாது என அறிவித்தார்கள். பண மதிப்பிழப்பால் பல்வேறு சிறு குறு தொழில்கள் அழிந்தது. நாட்டின் முதுகெலும்பான எம்எஸ்எம்இஐ முடக்கியது. அம்பானி குடும்பம் மட்டும் பிழைக்கிறது. ஊழலுக்கு புதிய முறையை தேர்தல் பத்திரம் போல் மூலம் மூன்று மடங்கு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுதான் பாஜக.

போராடும் விவசாயிகளை பா.ஜ.க நிர்வாகி ஜீப் ஏற்றி கொலை செய்கிறார்கள். தளபதி சொல்லியது போல் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தான் வருகின்ற தேர்தல், இந்த நாட்டில் நாமும் நம் பிள்ளைகளும் சுயமரியாதையுடன், பாதுகாப்புடன் வாழ இந்த தேர்தல் மூலம் நிரூபியுங்கள் என பொதுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில், திமுக மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், கந்தசாமி, குறிஞ்சி சிவகுமார், ராதாகிருஷ்ணன், நாமக்கல் ராணி, மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஷ் செந்தில்குமார் சின்னையன், செல்லபொன்னி, பழனிச்சாமி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திலகவதி, மாவட்ட மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர் குறிஞ்சிதண்டபாணிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News