ஆப்பக்கூடலில் சாலை விரிவாக்கப் பணியால் அந்தியூர் சாலை துண்டிப்பு: 6 கி.மீ சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள்
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் சாலை விரிவாக்கப் பணியால் அந்தியூர் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், 6 கி.மீ தூரம் சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ஆப்பக்கூடலில் சாலை விரிவாக்கப் பணியால் அந்தியூர் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், 6 கி.மீ தூரம் சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நால்ரோட்டில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு 2024-25ல் ரூ.1.80 கோடி மதிப்பில், நால்ரோட்டில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அந்தியூர் சாலையில், உள்ள சிறிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, சாலையின் நடுவில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்காக நெடுஞ்சாலைத் துறையினர், அந்த சாலையில் உள்ள சிறிய பாலத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணி நடைபெற்று வருவதால், தற்போது ஆப்பக்கூடல் - அந்தியூர் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணி கடந்த 2 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனிடையே, ஆப்பக்கூடலில் இருந்து ஆப்பக்கூடல் ஏரி, ரைஸ்மில், கூலிவலசு, முனியப்பன்பாளையம் வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றுப்பாதையில் சுமார் 6 கி.மீ தூரம் சுற்றி சென்று அந்தியூர் செல்வதால், சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆப்பக்கூடல் - அந்தியூர் சாலையில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.