அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு: ஒருவர் கைது
அந்தியூர் அருகே உள்ள பாலகுட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஜி.எஸ்.காலனி பாலகுட்டை டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 55). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலை 6 மணியளவில் வந்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த கந்தவேல் உறவினர்களுடன் தேடியதில், பாலகுட்டை ஆதிபராசக்தி கோயில் அருகே மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். உடனே அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து, அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பர்கூர் ஈரெட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (36) என்பதும், கடந்த 16 வருடங்களுக்கு முன்பு, கந்தவேல் வீட்டில் வேலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கந்தவேல் அளித்த புகாரில் பேரில் சோமசுந்தரத்தை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.