போலீசாரை கண்டித்து இலங்கை அகதிகள் உள்ளிருப்பு போராட்டம்
அரச்சலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் போலீசாரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே இலங்கை அகதிகள் முகாம் 1990ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அகதிகள் முகாமை சேர்ந்த ரெபிக்சன், விதுர்சன், ஆண்டனி மகன் ரெபிக்சன் ஆகியோரை கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 6ம் தேதி அரச்சலூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, 3 வாலிபர்கள் மீது போலீசார் பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் இன்று போலீசாரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்திற்கு தலைமை வகித்த முகாம் தலைவர் ராஜா கூறுகையில், எங்கள் முகாமை சேர்ந்த கைதான 3 வாலிபர்களும் கஞ்சா விற்பனை செய்யவில்லை. அவர்கள் மீது போலீசார் பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான 3 பேரும் நிரபராதிகள். மேலும், அகதிகள் முகாமை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் முன்விரோதத்துடன் நடந்து வருகிறார். அவரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த அரச்சலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.