தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என, மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-07-28 05:43 GMT

இது தொடர்பாக, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். புதிய உறுப்பினராக சேர விரும்புவோர், உறுப்பினராவதற்கு தேவையான உறுப்பினர் விண்ணப்ப படிவம் தங்களது பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தில் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று, ஆதார் அட்டை நகல், பான் கார்டு நகல் ஆகியவற்றுடன், பங்குத்தொகை ரூ. 100 மற்றும் நுழைவு கட்டணம் ரூ.10 நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைத்து உறுப்பினராகி கொள்ளலாம்.

தபால் மூலமாக விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனுப்பும்போது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணைத்து பங்கு தொகை மற்றும் நுழைவு கட்டணத்தை மணி ஆர்டர் மூலமாக செலுத்தி, அதன் ரசீது எண் செலுத்தப்பட்ட அஞ்சலகத்தில் பெயர் முகவரி ஆகியவற்றை சங்கத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

எனவே, ஈரோடு மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் தங்கள் சார்ந்துள்ள பகுதில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி அதன் சேவைகளையும் கடன்களையும் பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உரிய பயன் பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News