ஈரோட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் : அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு நடப்பதாக, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட மாருதி நகர், தெற்குபள்ளம் சாலை, பாரதி வித்யா நகர், பி.வி.பி பள்ளி சாலை உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டம் மற்றும் ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைத்து புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி 10.63 லட்சம் மதிப்பிலான பணிகளை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். இதனையடுத்து, சோலார் பகுதியில் அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதோடு அதனுடன் சேர்த்து மொத்த காய்கறி விற்பனை சந்தை மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சரக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டு உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சட்டக்கல்லூரி, விவசாயக் கல்லூரி ,மஞ்சள் ஆராய்ச்சி மையம், ஆட்டோமொபைல் நகரம் என 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.