25 குடியிருப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கிய அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துச்சாமி எடுத்த நடவடிக்கையால் 25 குடியிருப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஏழை கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லை, உரிமையாளர் குறித்து ஆவணங்கள் இல்லை, வீட்டு வரி விதிக்கவில்லை, கதவு எண் பதிவு செய்யவில்லை என்ற பல்வேறு காரணங்களை காட்டி மின் இணைப்பு கொடுக்க இயலாது என மின்வாரியம் கடந்த இருபது வருடமாக கையை விரித்து விட்டனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி திமுக ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் சரவணன் ஆகியோர் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமியிடம் முறையிட்டனர். பகவதி நகர் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அரசின் தடையின்மை சான்று கிடைக்காத காரணத்தால் இருபது வருடமாக மின்சாரம் இன்றி இருளில் புழு, பூச்சி, தொல்லைகளில் வாழ்ந்து வருவதாகவும் மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவாய் துறை மூலம் தடையின்மை சான்று வழங்கி மின் இணைப்பு பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் தடையின்மை சான்றினை வழங்கினார் இதனால் இருபது வருடமாக மின் இணைப்பு இன்றி தவித்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துச்சாமி எடுத்த நடவடிக்கையால் 25 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு உடனடியாக கொடுக்கப்பட்டது.