மொடக்குறிச்சி அருகே லாரியும், காய்கறி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து

மொடக்குறிச்சி அருகே மணல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரியும் காய்கறி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-10-22 06:00 GMT

விபத்தில் சேதமடைந்த வாகனம். 

கரூரிலிருந்து ஈரோட்டிற்கு எம்-சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி இன்று காலை வந்து கொண்டிருந்தது. அதேபோல் ஈரோடு காய்கறி மார்க்கெட்டிலிருந்து தக்காளி, வெங்காயம் ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி வேன் சென்று கொண்டு சென்று கொண்டிருந்தது. ஈரோடு - கரூர் சாலையில் பஞ்சலிங்கபுரம் அருகே வந்தபோது காய்கறி வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காய்கறி வாகனத்தின் முன்பகுதி முற்றிலுமாக சுக்குநூறாக நொறுங்கியது. காய்கறி வாகனத்தை ஓட்டிவந்த கரூர் மாவட்டம் திருவான்மியூர் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பூபதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மொடக்குறிச்சி காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், மொடக்குறிச்சி காவல்துறையினர் மற்றும் மொடக்குறிச்சி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News