கரீப் கல்யாண் யோஜனா திட்டம் குறித்து மொடக்குறிச்சி எம்எல்ஏ., சரஸ்வதி ஆய்வு
கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நவதானிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வழக்கப்படுகிறதா என எம்எல்ஏ.,சரஸ்வதி ஆய்வு செய்தார்.;
கொரோனா காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் வழக்கமான மானிய விலையுடன் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படுகிறதா என எம்எல்ஏ., சரஸ்வதி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, பயனாளிகளுக்கு, பொருட்களை வழங்கினார். தகுதியான கார்டுதாரர்கள் அனைவருக்கும் பொருட்கள் சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டார். இது குறித்து எம்எல்ஏ., சரஸ்வதி கூறுகையில், கொரோனா காலத்தில் 80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் மூலம் நவம்பர் மாதம் வரை நவதானியங்களை ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தகுதியான கார்டுதாரர்கள் அனைவரும் வாங்கி பயன்பெறலாம், என்றார்.