பக்தர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்து :3பேர் பலி
அவல்பூந்துறை அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த வடக்கு வெள்ளியம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இதற்காக சாமிக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈரோடு - அரச்சலூர் மெயின் ரோட்டில் உள்ள கொளாங்காட்டு வலசு என்ற பகுதியில் நேற்று இரவு தீர்த்தம் எடுக்க சென்றனர்.
அங்குள்ள போர் பைப்பில் தீர்த்தம் எடுத்து விட்டு சென்று கொண்டிருந்தனர்.. இந்நிலையில் அவல்பூந்துறை அடுத்த காளிபாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பவர் ஈரோட்டிலிருந்து அவல்பூந்துறை குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுபிட்டை இழந்த கார் தீர்த்தம் எடுக்கச் சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.. இதில் வடக்குவெள்ளியம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (40), கண்ணம்மாள் (45) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (42) என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த அம்மணி (48), கணபதி (53), மகேஸ்வரி (26), ரஞ்சித் (11), பொன்னுசாமி (55), விசுவநாதன் (28), ராமசாமி (48), சேகர் (35), முருகன் (60), கார்த்தி (26), ஆகிய 10 பேரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காரில் வந்த யுவராஜ் அவரது மனைவி சமயம் பாத்திமா 26 மகன்கள் ஆஜீத் (8), சுஜீத் (ஒன்னரை வயது) ஆகிய 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்கோவிலுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.