அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்த எம்எல்ஏ
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தண்ணீர் திறந்து வைத்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.4 அடி ஆகும். அணையில் 30.38 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு மார்ச் 9ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமை தாங்கி அணையின் மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது அணையில் இருந்து கொப்பு வாய்க்காலில் சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீர் மீது விவசாயிகள், அதிகாரிகள் பூ தூவி வரவேற்றனர்.
அப்போது, அணையில் இருந்து வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மூலம் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு, சங்கராபாளையம், செல்லம்பாளை யம், புதுக்காடு, ஊஞ்சக்காடு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்து 924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கூறுகையில், அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி குறுகிய கால பயிரான எள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யலாம். மேலும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.