சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெயர் பலகையை திறந்து வைத்த அமைச்சர்கள்!

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு உதவி பெறும் கல்லூரியை சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்து பெயர் பலகையினை அமைச்சர்கள் முத்துசாமி, கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.;

Update: 2025-03-29 14:40 GMT

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு உதவி பெறும் கல்லூரியை சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்து பெயர் பலகையினை அமைச்சர்கள் முத்துசாமி, கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

உயர்கல்வித்துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் சிக்கய்ய நாயக்கர் அரசு உதவி பெறும் கல்லூரியினை சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்து பெயர் பலகையினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர்.கோவி.செழியன் ஆகியோர் இன்று (மார்ச் 29) திறந்து வைத்தனர்.

பின்னர், அமைச்சர்கள் முத்துசாமி, கோவி.செழியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-  தமிழ்நாடு முதலமைச்சரின் உயர்கல்வித்துறையின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக நீண்ட நாள்களாக பாதுகவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, அரசு கல்லூரியாக மாற்றிட தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மசோதாவிற்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதை விளக்கி ஒப்புதல் வழங்கிட கோரிக்கை வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், இடையில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டு, தற்பொழுது சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு என்ற பெயரில் இன்று முதல் அழைக்கப்படுகிறது.

சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு என்ற பெயரில் அரசு கல்லூரியாக செயல்படும். இக்கல்லூரி 11 இளநிலைப் பாடப்பிரிவுகளும், 3 முதுநிலைப் பாடப்பிரிவுகளும், 11 ஆராய்ச்சி படிப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இளநிலை பிரில் 376 ஆண்கள், 567 பெண்கள் மற்றும் முதுநிலை பிரிவில் 32 ஆண்கள், 44 பெண்கள் என 1019 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

குடும்பத்தையே பல்கலைக்கழகமாக நடத்தும் திறமை பெற்ற பெண்களால் பொது வாழ்விலும் சமுதாயத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான், இக்கல்லூரியில் மாணவியர்கள் சேர்க்கை விகிதம். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவியர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று வருவது அரசின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இனிவரும் கல்வியாண்டுகளில் மாணவர்களின் தேவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் புதிய இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தற்போதுள்ள 1,019 என்ற நிலைமாறி வரும் கல்வியாண்டுகளில் இக்கல்லூரியியல் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை பன்மங்கு உயர்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்படுவதால், பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் பிற திட்டங்களின் மூலம் இக்கல்லூரிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக, இக்கல்லூரியில், ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை போல தந்தை பெரியார் பிறந்த மண்ணிலும் மிகப்பெரிய நூலகம் அமைப்பதற்கு அனைத்து விதமாக முயற்சியும் மேற்கொள்வோம். தமிழ்நாடு முதலமைச்சரும் இந்நூலகம் அமைப்பதில் மிகுந்த ஆர்த்துடன் உள்ளார்கள்.

தற்போது இக்கல்லூரியில் உள்ள உட்கட்டமைப்புகள் புதிய கட்டிடங்கள் விடுதிகள், சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் வகுப்பறைகள் என என்னென்ன தேவை என்பது குறித்து கல்லூரி நிர்வாகத்தின் மூலம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இக்கருத்துக்கள் அனைத்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகழ்மிக்க இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றியிருப்பது உயர்கல்வித்துறைக்கு கிடைத்த பெருமையாகும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், கோவை மண்டல இணை இயக்குநர் கல்லூரிக் கல்வி இயக்ககம் வெ.கலைச்செல்வி, கல்லூரி முதல்வர் திருக்குமரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News