அந்தியூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: சீர்வரிசை பொருட்களை வழங்கிய அமைச்சர்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர்கள் கோவி.செழியன், முத்துசாமி ஆகியோர் வழங்கினர்.;
சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, பெட்டகத்தினை அமைச்சர்கள் கோவி.செழியன், முத்துசாமி ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.
அந்தியூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர்கள் கோவி.செழியன், முத்துசாமி ஆகியோர் வழங்கினர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள கே.எம்.பி. திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா இன்று (மார்ச் 6ம் தேதி) நடைபெற்றது.
இந்த விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, அந்தியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐவகை உணவுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), வெங்கடாசலம் (அந்தியூர்), மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பூங்கோதை, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அத்தாணி பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.