தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி!
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.;
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கவர்னர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நியாயமான தீர்ப்பை அளித்து உள்ளது.
மாநில அரசு எப்படி பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பால் மற்ற மாநிலங்களும் பயனடையும். தமிழக அரசின் சிறந்த செயல்பாட்டுக்கு இந்த தீர்ப்பு சான்றாக அமைகிறது.
தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்ததற்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த ஆடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுத்தது போல தமிழகத்துக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறோம். மத்திய அரசை எதிர்த்து போராடுகிறோம்.
நீட் தேர்வு விலக்கில் ரகசியம் ஒன்றும் இல்லை. தேர்வு வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக நின்று ஆதரவாக செயல்பட வேண்டும்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. சட்டசபையில் பேசும் அனைவரது பேச்சும் ஒலிபரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.