ஈரோடு காரப்பாறையில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்!
ஈரோடு காரப்பாறை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.;
ஈரோடு காரப்பாறை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் திண்டல் காரப்பாறை மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று (மார்ச் 22) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் பொது மருத்துவம், மகப்பேறு நல மருத்துவம், எலும்பு சிகிச்சை, பல், தோல், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை. கர்ப்பப்பை வாய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, காசநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவின்கீழ் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி பெரியவலசு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், இரட்டை பிள்ளையார் கோவில், பெரிய வலசு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், துணை இயக்குநர் (சுகாதாரம்) பானுமதி, மாநகர் நல அலுவலர் மரு.கார்த்திகேயன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.