ஈரோடு, மொடக்குறிச்சியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு
ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் முத்துசாமி இன்று (மார்ச் 5ம் தேதி) வழங்கினார்.;
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குந்தர் கல்யாண மண்டபத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் முத்துசாமி வழங்கிய போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் முத்துசாமி இன்று (மார்ச் 5ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குந்தர் திருமண மண்டபம் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடிவுள்ள மங்கை திருமணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாக்களில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிகளில், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, அவர்களுக்கு சீர்வரிசையாக தட்டு, பழம், வளையல், பூ, மஞ்சள், குங்குமம், இனிப்பு, காரம் ஆகியவற்றுடன் 5 வகையான மதிய உணவு வழங்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.
கர்ப்பிணி தாய்மார்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், தங்களை பாதுகாக்க அரசு மற்றும் அரசு சார்ந்த துறை அலுவலர்கள் இருக்கின்றார்கள் என்ற உணர்வோடு இருப்பதை காண முடிகிறது. சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர்.
அதேபோல, மாற்றுத்திறனாளிகள் அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 21 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஐ.பூங்கோதை, மாநகர் நல அலுவலர் மரு.கார்த்திகேயன், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.