ஈரோடு: வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி; அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதையொட்டி, அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2025-02-22 11:50 GMT

வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் ஈரோடு சென்னிமலை சாலை வரை, சாலை முழுவதும் நகரப்பகுதியில் அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் சிறுபாலம் திரும்பக்கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல், பாதுகாப்பு சுவர் கட்டுதல் நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதைத் தொடர்ந்து, அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படுத்தாத வகையில் சாலைகளை அகலப்படுத்திட வேண்டும் எனவும், சாலைகளை தரமாக அமைத்து உரிய உரிய காலத்தில் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பெருந்துறை ஆர்.எஸ். - அறச்சலூர் சாலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல், சிறுபாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர கட்டும் பணி முடிவுற்றதைத் தொடர்ந்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவகர், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ரமேஷ்கண்ணா, உதவி பொறியாளர் மணிகண்டன், வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News