ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-19 11:30 GMT

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளி சுந்தரம்பாள் (வயது 55) என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார். அடுத்ததாக தொடர் சேவை சிகிச்சையில் உள்ள வசந்தா (வயது 60) என்பவரையும் சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டம் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டபோது அவர் கூறியது, முதல் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தருகிறேன், ஒரு கோடியாவது பயனாளிக்கும் மருந்து பெட்டகத்தை தருகின்ற நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்று கூறினார்.

இந்த திட்டத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை, டயாலிஸிஸ் என்று தொற்றா நோய்களுக்கான இம்மருத்துவத்தை வீடுகள் தோறும் தேடிச் சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, மருந்துகள் தருவது. அந்தவகையில் இந்த திட்டம் 2021ல் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் 50 லட்சமாவது பயனாளிக்கு சித்தாலப்பாக்கத்தில் உள்ள  மருந்து பெட்டகம் தரப்பட்டது. மீண்டும் முதலமைச்சரே திருச்சிக்கு வருகை புரிந்து 1 கோடி 01வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தந்தார்.

அந்தவகையில் இத்திட்டம் படிப்படியாக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களை சென்றடைந்திருக்கின்றது என்கின்ற வகையில் 2 கோடியாவது பயனாளியாக சுந்தரம்பாள் (வயது 55) என்பவருக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று (டிச.19) மருந்து பெட்டகம் தரப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தொடர் சேவைப் பெறுபவர்கள் 4,29,71,772 பேர் இதில் பயன்பெற்று வருகிறார்கள்.

உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,00,01,363 பேர். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 49,45,745 பேர். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 44,28,972 பேர். நோய் ஆதரவு சிகிச்சை பெறுபவர்கள் 5,40,822 பேர், இயன்முறை சிகிச்சை பெறுபவர்கள் 7.25,042 பேர். சிறுநீரகம் சிகிச்சை (டயாலிஸிஸ்) பெறுபவர்கள் 434 என்கின்ற வகையில் இதுவரை 2 கோடியை கடந்து இந்த சிகிச்சைகள் சென்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் தொடர் சேவை என்கின்ற வகையில் 04,29,71,772 பேர் பயன்பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சிகிச்சையில் பயன்பெற்று வருகிறார். மேலும் நஞ்சனாபுரம் பகுதியில் மட்டுமே 1005 என்கின்ற வகையில் மக்கள் தொகை இருக்கின்றது. இதில் 136 பேர் மருத்துவ பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு புதிதாக சுந்தரம்பாள் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் நோய் இருப்பதை கண்டறியப்பட்டு அவருக்கு மருந்து பெட்டகம் தரப்பட்டிருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம் எனும் இத்திட்டத்தில் 14,000 மேற்பட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வருகை புரிந்து 2 பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரை பொறுத்தவரை இந்த திட்டத்தை தொடக்கத்திலிருந்தே கண்காணித்து இத்திட்டத்தின் வளர்ச்சியை தொடர் ஆய்வு செய்ததன் காரணமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

அம்மா கிளினிக் என்பது நான் ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டேன். 1700 மருத்துவமனைகள் ஒரே ஒரு மருத்துவரோடு, செவிலியர் கூட இல்லாமல், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும்போது சுடுகாடு போன்ற இடங்களிலும் இம்மருத்துவமனையை வைத்திருந்தார்கள் ஒரு மருத்துவரை வைத்து, அதுவும் கூட மாநில அரசின் நிதி ஆதாரம் இல்லை.

NHM என்று சொல்லக்கூடிய தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆதாரம் கொண்டு. ஒரு வருடத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒரு வருடம் கழித்து தானாகவே அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்த அரசு அம்மா கிளினிக்கை மூடியது போன்று தோற்றத்தை அவர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். ஏற்கெனவே இது சம்மந்தமாக அதற்கான ஆணைகளை காண்பித்து சட்டமன்றத்தில் பதில் கூறினோம்.

சுடுகாடு என்று சொன்னவுடன் எங்கே என்று கேட்டார். வாருங்கள் சைதாப்போட்டையில் சாரதிநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒரு பகுதியை எடுத்து நீங்கள் அம்மா கிளினிக் அமைத்திருக்கிறீர்கள். இப்போதும் இருக்கின்றது வாருங்கள் நாங்கள் காண்பிக்கிறோம் என்று சொன்னேன், இப்போதும் சொல்கிறேன் அவர் வந்தால் காண்பிக்க தயாராக இருக்கின்றேன்.

எனவே அவர் ஏதாவது காரணங்களை சொல்வது எப்போதும் வாடிக்கையான ஒன்று, எனவே மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்பது இந்திய அளவில் அல்ல உலகளவில் வேறு எங்கேயும் செயல்படுத்தப்படாத திட்டம் என்பதால்தான் ஐ.நா மன்றமே இத்திட்டத்திற்கு விருது தந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News