குருவரெட்டியூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பூமணிசாமி கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 55). இவர் குருவரெட்டியூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பால் பரிசோதகராக வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில், இவர் நேற்று காலை கரடிபட்டியூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.