அந்தியூரில் போட்டோ ஸ்டூடியோவில் பொருட்கள் திருடியவர் கைது!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போட்டோ ஸ்டூடியோவில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
அந்தியூரில் போட்டோ ஸ்டூடியோவில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் எதிரில் கவுதம் என்பவர் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு இவரின் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்த மர்ம நபர் கேமரா, ஹார்டு டிஸ்க் உள்பட ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து கவுதம் அந்தியூரில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை அந்தியூர் போலீசார் அண்ணாமடுவு ரவுண்டானாவில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் கேரள மாநிலம், பாலக்காடு புல்லிச்சேரியை சேர்ந்த முபாரக் அலி (வயது 50) என்பதும், அவர் தான் கவுதமின் ஸ்டூடியோவிலும், கடந்த 16ம் தேதி சித்தோட்டில் உள்ள ஸ்டூடியோவில் திருடியது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக் அலியை கைது செய்தனர்.