பெருந்துறை: வடமாநில தொழிலாளர்களிடம் விற்க கஞ்சா கடத்தியவர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வடமாநில தொழிலாளர்களிடம் விற்க 20 கிலோ கஞ்சாவை காரில் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெருந்துறை அருகே வடமாநில தொழிலாளர்களிடம் விற்க 20 கிலோ கஞ்சாவை காரில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருவாச்சி மணலாங்காட்டு தோட்டத்தில் பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இண்டிகா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 2 சாக்கு மூட்டைகளில் 20 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பவானி அருகே உள்ள புள்ளபாளையம் ஆலமரத்துவலசு செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்கிற பாம்பாட்டி மணி (வயது 40) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் கஞ்சாவை காரில் வைத்து பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் போதைக்கு அடிமையான இதர தொழிலாளர்களிடம் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பாம்பாட்டி மணியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பாம்பாட்டி மணியை ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.