ஈரோடு மாவட்டத்தின் முக்கிய க்ரைம் செய்திகள்..
கோபி அடுத்த பங்களாப்புதூரில் வீட்டின் அருகே காலி இடத்தில் செடிகளுக்கு இடையே துணியை கட்டி மறைத்து கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1). கஞ்சா செடி வளர்த்தவர் கைது..
சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் நரசபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்துசாமி (வயது 31).இந்நிலையில், இவர் வீட்டின் மேற்புறத்தில் உள்ள காலி இடத்தில் செடிகளுக்கு இடையே துணியை கட்டி மறைத்து கஞ்சா செடி வளர்த்து வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கஞ்சா செடி வளர்ப்பதை உறுதி செய்த போலீசார், 3 கஞ்சா செடியைப் பறிமுதல் செய்து, இதனை வளர்த்த முத்துசாமி என்னும் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
2). மாவட்டத்தில் இன்று மது விற்ற 23 பேர் கைது..
ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, இன்று (2ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 23 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 216 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
3). குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..
சத்தியமங்கலம் அருகே உள்ள அங்கண்ணகவுண்டன்புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனியப்பன் (34). கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 30ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு முனியப்பன் வந்துள்ளார்.இதனால் மீண்டும் தகராறு ஏற்படவே ருக்மணி அவரது மகன்களுடன் கோபித்துக்கொண்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில், மனவேதனை அடைந்த முனியப்பன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
4). ஈரோடு நகர சப்-டிவிசனில் போக்சோ வழக்கில் 42 பேர் கைது..
ஈரோடு நகர போலீஸ் சப்-டிவிசனுக்கு கீழ் உள்ள ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், ஈரோடு டவுன், வடக்கு, தெற்கு, கருங்கல்பாளையம், தாலுகா. மொடக்குறிச்சி, ஜி.ஹெச் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் நடப்பாண்டில் இதுவரை டவுன் போலீஸ் சப்டிவிசனில் மட்டும் 57 பேர் மீது 46 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 42 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாக, போலீஸ் அதிகாரி கள் தெரிவித்தனர்.
5). விஷம் குடித்து இரும்பு வியாபாரி உயிரிழப்பு..
கொடுமுடி ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (38), பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி முருகேஷ்வரி. வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், மனவேதனை அடைந்த வெங்கடேசன் கடந்த 30ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
6). இளம்பெண் மாயம்..
ஈரோடு 46 புதூர் குப்பநாயக்கன் தோட்டத்தை சேர்ந்த குழந்தைவேல் மகள் அகல்யா (19). இவர், பிளஸ் 1 வரை படித்து விட்டு. கோவையில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஈரோட்டில் பெற்றோருடன் தங்கியிருந்தவர், கடந்த 29ம் தேதி சென்னிமலை கோயிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகள். தோழிகளிடம் விசாரித்து பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குழந்தைவேல் அளித்த புகாரில் பேரில் ஈரோடு தாலுக்கா போலீசார் விசாரிக்கின்றனர்.
7). தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு..
கருங்கல்பாளையம் அருகே உள்ள வடக்கு சின்னமாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கோவிந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா (85). கணவன் இறந்ததால் மகன் வீட்டில் சகுந்தலா வசித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சகுந்தலா சேலையில் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.