கீழ்வாணியில் செல்போன் மூலம் நூதனமாக லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் செல்போன் மூலம் லாட்டரி சீட்டை நூதன முறையில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி போகநாயக்கனூர்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (35). இவர் கீழ்வாணியில் 10 ஆண்டுகளாக குமரன் பேக்கரியை நடத்தி வருகிறார். இந்நிலையில், கருப்புசாமி செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.
அப்போது அவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்போனில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது.இதையடுத்து கருப்புசாமியை போலீசார் கைது செய்தனர்.