திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால், 7 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதை, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த திம்பம் மலைப்பாதையானது, தமிழக-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது. இந்நிலையில் தாளவாடியில் இருந்து அந்தியூருக்கு கிரானைட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது இந்த லாரியில் உள்ள ஆக்சில் கம்பி கட்டாகி விட்டது.இதனால் லாரி பழுதாகி அப்படியே நின்று விட்டது. இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் அழைத்து வரப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணி நடைபெற்றது. இன்று காலை 7 மணி அளவில் லாரியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியாக பஸ், சுற்றுலா வாகனங்களில் வந்த பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.