வெள்ளித்திருப்பூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஒலகடம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் சண்முகம் (56). இவரது மகன் கார்த்தி (வயது 38). கூலித் தொழிலாளியான கார்த்திக்கு திருமணமாகி மனைவியுடன் கருந்து வேறுபாடு ஏற்பட்டு தந்தையுடன் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கார்த்தி ஒலகடம் சந்தையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டது.
இதனையடுத்து, பாம்பு கடித்த பயத்தால் எழுந்து ஓடிய கார்த்தி மயங்கி கீழே விழுந்ததார். இதுகுறித்த தகவலறிந்து வந்த சண்முகம், கார்த்தியை மீட்டு பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.