அத்தாணி: புகழ்பெற்ற கொம்பு தூக்கி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
அத்தாணி அருகே பிரசித்தி பெற்ற கொம்பு தூக்கி அம்மன் கோவிலில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே, கரும்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கொம்புதூக்கி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடைபெற்றது. இன்று காலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். மதியம் அக்னி குண்டத்தில் முதலில் பூசாரி மூன்று முறை சுற்றிவந்து இறங்கினார்.
தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிலர் கைக்குழந்தையுடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, கீழ்வாணி, மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், கோபி, ஆப்பக்கூடல், பவானி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் இருக்கும் வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வெடிகள் வெடிக்க அனுமதிக்கவில்லை.
விழாவுக்கு வந்த பக்தர்களை, மாலை, 6 மணிக்கு மேல் வனத்துறை அதிகாரிகள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். அந்தியூர் மற்றும் பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இக்கோயிலின் மறுபூஜை வருகிற 16ம் தேதி நடக்கிறது.