ஈரோட்டில் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கல்
ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற 31 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற 31 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில், நான் முதல்வன் மற்றும் புதுமைப்பெண் ஆகிய திட்டங்களின் மூலம் பயன் பெற்ற மாணவ, மாணவியர்களுடன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடி, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற 31 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் மற்றும் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
இத்திட்டங்களின் மூலம் பயன் பெற்ற மாணவ, மாணவியர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கலந்துரையாடினார். நான் முதல்வன் மற்றும் புதுமைப்பெண் ஆகிய திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பல்வேறு மாணவ, மாணவியர்கள் இத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, நானஅ முதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தில் உங்களை சந்தித்து, உங்களின் கருத்துகளை கேட்பதற்கு வந்துள்ளோம். இதன் மூலம் இத்திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நிச்சயம் உதவி செய்யும். மேலும், மாணவியர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக நம்முடைய அரசு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படுவதுடன் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக இதுவரை சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 11,000 மாணவியர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். உங்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சுமார் 33 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும், சுமார் 20,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் சார்ந்த பயிற்சிகள் பெற்று பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 31 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை) அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அஹமத், மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்) இன்னசென்ட் திவ்யா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நாரணாவாரே மனிஷ் சங்கர்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) ஆனந்தகுமார், உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.