அந்தியூர் அருகே போதையில் வாலிபர் ரகளை
தாலுக்கா அலுவலகம் எதிரில், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடந்து சென்றவர் மீது மோதியதால் கைகலப்பு ஏற்பட்டது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகம் எதிரில், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தலைக்கேறிய குடிபோதையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். போதையில் தடுமாறியபடி சென்ற அந்த வாலிபர், சாலையின் இடது புறம் நடந்து சென்றவர்கள் மீது மோதி கீழே விழுந்தார். இதையடுத்து, நடந்து சென்றவர்களுக்கும் குடிபோதை வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றிய நிலையில், போதை வாலிபர், அவரை தட்டிக் கேட்டவர்களையும், அங்கு நின்றிருந்தவர்களையும் தகாத வார்த்தையால் கடுமையாக திட்டியபடி கைகளால் தாக்கினார்.
இதனால் போதை வாலிபருக்கும், அப்பகுதியில் இருந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், அப்பகுதியில் சுற்றித் திரிந்த மன நோயாளி ஒருவரை போதை வாலிபர் தாக்கவும் முற்பட்டார். தகவல் அறிந்து அந்தியூர் போலீசார் அப்பகுதிக்கு வந்து சமரசம் செய்தனர். அதன்பிறகு, போதை தலைக்கேறி சாலையில் சுருண்டு விழுந்த வாலிபரை, அந்தியூர் போலீசார் முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் 20 நிமிடத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.