சத்தியமங்கலம்: கடம்பூரில் அகில உலக பெண்கள் தினவிழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் அகில உலக பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-03-10 05:40 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் அகில உலக பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பரண் டிரைபல் சொசைட்டி மற்றும் பழங்குடி ஊராளி மக்கள் சங்கத்தின் சார்பில் அகில உலக பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பரண் டிரைபல் சொசைட்டி இயக்குநர் கென்னடி தலைமை தாங்கினார்.

இந்த விழாவில், பெண்கள் தன்னிச்சையாக இயங்க, சுய தொழில் செய்ய வேண்டி வலியுறுத்தி, பரண் டிரைபல் சொசைட்டி வளாகத்தில் குயின்ஸ் பேஷன் தையலகத்தை சென்னை மறை மாநிலம் இயேசு சபை   வளர்ச்சி திட்ட இயக்குநர் வசந்த் திறந்து வைத்தார்.


தொடர்ந்து, பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இசையோடு தொடங்கிய விழாவை,  ஜோகோ கம்பெனி சீனியர் மேனேஜர் ராகுல் தொடக்கி வைத்தார். விழாவில், செங்கல்பட்டு மாவட்ட பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவரும், ஆதிவாசி கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், இயக்குநருமான சொர்ணலதா, பழங்குடி நலத்துறை உறுப்பினர் பாலாஜி, ஊராளி மக்கள் பொது சங்க செயலாளர் மசணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

மேலும், பெண் கல்வியை மையமாக கொண்ட பரணிதழை, சிறப்பு அழைப்பாளர் ராகுல் வெளியிட்டார். விழாவில், கலந்து கொண்ட பெண்கள் மற்றும் பரண் கலைக்குழு உறுப்பினர்கள், பெண் கல்வியின் அவசியம் பற்றியும், பெண்களின் கல்விக்கு தடையாக இருக்கிற சமூக சடங்குகள், பற்றி நடனம் மற்றும் நாடகங்கள் மூலமாக வலியுறுத்தினர்.


இவ்விழாவில், குத்தியாலத்தூர், கூத்தம்பாளையம், குன்றி மற்றும் திங்களூர் பஞ்சயாத்திற்கு உட்பட்ட 53 பழங்குடி ஊராளி மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருந்து 800 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான, ஏற்பாடுகளை பரண் டிரைபல் சொசைட்டி துணை இயக்குநர் உதயா தலைமையில் பரண் டிரைபல் பணியாளர்கள், கோகுல், மதன், ரங்கசாமி, மாதேஷ், சகாயமேரி, லீமா மேரி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News