அம்மாபேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவர் திடீர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி நேற்று தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பவானி உட்கோட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தை நேற்று கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது காவல் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தும், நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை முடித்து இறுதி அறிக்கையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் நடக்க வைத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர அறிவுறுத்தினார்.
மேலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் நல்லமுறையில் பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, பவானி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அம்மாபேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.