சென்னிமலை, பெருந்துறை பகுதிகளில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சென்னிமலை, பெருந்துறை பகுதியில் தானியங்கி நீர் மேலாண்மை கருவி பொருத்தப்பட்டுள்ள பணியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-29 12:37 GMT

தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதியில் தானியங்கி நீர் மேலாண்மை கருவி பொருத்தப்பட்டுள்ள பணியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் செவ்வாய்க்கிழமை (இன்று) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெ.குட்டப்பாளையம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்முடி ஆகிய ஊராட்சிகளில், தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளுக்கு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ள பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் ஆணையருமான (வருவாய் நிர்வாகம்) ஜி.பிரகாஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தெரிவித்ததாவது:-

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கடந்த, 25ம் தேதி சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வெ.குட்டபாளையம் ஊராட்சியில், தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் பணியினை துவக்கி வைத்ததை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வெ.குட்டப்பாளையம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பொன்முடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ள பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வெ.குட்டப்பாளையம் ஊராட்சியில் உள்ள 9 குக்கிராமங்களில் 9 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் முழுவதுமாக தானியங்கி முறையில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் "ரியல் டெக் சிஸ்டம்" நிறுவனத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இயக்குவது முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுவதால் தண்ணீர் இன்றி மோட்டார் இயங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள், மின்சார விரயம், நீர் விரயம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


நீர் பயன்படுத்தப்படும் அளவு, தொட்டியில் நீர் உள்ள அளவு ஆகியவற்றை மொபைல் செயலி மூலம் தெரிந்துகொள்ளவும், கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.வெ.குட்டப்பாளையம் ஊராட்சியில் உள்ள சுமார் 2.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 9 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து மக்களுக்கு காலை, மாலை இரு வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் காலதாமதம் இன்றி குடிநீர் விநியோகம் சீராக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இவ்வூராட்சியில் 5,129 பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர்.  மேலும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் பொன்முடி ஊராட்சியில் மொத்தம் 10 மேல்நிலைத் தொட்டிகள் உள்ளது. மேற்படி நீர் தேக்கத் தொட்டிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய புதிய திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இருதினங்களுக்கு ஒருமுறை 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பெறப்படுகிறது.

மேற்படி பெறப்படும் குடிநீரை பொன்முடி கிராம ஊராட்சியிலுள்ள 10 மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் செய்து வினியோகம் செய்ய தானியங்கி கட்டுப்பாட்டு கருவி மொத்தம் ரூ.15.85 லட்சம் செலவில் ஊராட்சி நிதி கனிமம் மற்றும் சுரங்கம் நிதி, மற்றும் தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிநீர் வீணாகாமல் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டும் மின் மோட்டார் இயக்க நேரம் குறைப்பதன் மூலம் 40% மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது/

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) ராமசாமி, உதவி பொறியாளர்கள் அக்ஷய்குமார், பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவகுமார், உதவி நிர்வாக பொறியாளர் ரேவதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரேணுகாதேவி (வெ.குட்டப்பாளையம்), வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), இளங்கோ (குமாரவலசு) தங்கவேல் (பொன்முடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு, ரமேஷ், ஜோதி பாக்கியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News