ஈரோட்டில் அரசு அதிகாரியின் பெயரில் போலி கடிதம் தயாரித்து பள்ளிகளில் குறும்படம் காண்பித்து பணம் வசூல்: 3 பேர் கைது
ஈரோட்டில் அரசு அதிகாரியின் பெயரில் போலி கடிதம் தயாரித்து பள்ளிகளில் குறும்படம் காண்பித்து பணம் வசூலித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட 3 பேரை போலீசார் அழைத்து சென்ற போது எடுத்த படம்.
ஈரோட்டில் அரசு அதிகாரியின் பெயரில் போலி கடிதம் தயாரித்து பள்ளிகளில் குறும்படம் காண்பித்து பணம் வசூலித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 4 பேர் கொண்ட குழுவினர் சென்று விழிப்புணர்வு குறும்படம் போடுவதாக கூறி வந்துள்ளனர். ஆனால், பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று உத்தரவு உள்ளதாக தலைமை ஆசிரியர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
அதற்கு, அவர்கள் தாங்கள் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி (பி.ஆர்.ஓ.) அனுமதி பெற்று வந்திருப்பதாக ஒரு கடிதத்தை கொடுத்துள்ளனர். அதில், மக்கள் தொடர்பு அதிகாரியின் கையொப்பமிடப்பட்டு இருந்ததால், அவர்கள் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் அளித்துள்ளனர். அந்த குழுவினர் திரையிடும் விழிப்புணர்வு குறும்படத்தை பார்க்க விரும்பும் மாணவ-மாணவிகளிடம் தலா ரூ.10 வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பள்ளிகளில் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவினர் குறித்து ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சுகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, அவர் ஈரோடு சூரம்பட்டி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பள்ளிகளில் தனியார் மூலம் நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் எனது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதன்பேரில் சூரம்பட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிந்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசன்னராஜ் (வயது 45), சின்னபாவடியை சேர்ந்த கார்த்திகேயன் (44), சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த கோவிந்த ராஜ் (44), சங்ககிரியை சத்தியநாராயணன் (45) ஆகிய 4 பேரை பிடித்தனர்.
அவர்கள் அரசு அதிகாரியான மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியின் போலி கையொப்பத்தை வைத்து போலியாக கடிதம் தயாரித்து பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பி வந்தது தெரியவந்தது. இதற்காக மாணவ-மாணவிகளிடம் தலா ரூ.10 கட்டணமாக வசூலித்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, நேற்று பிரசன்னராஜ், கோவிந்தராஜ், கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சத்திய நாராயணன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.