2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதி கேட்டு பெறுவோம்: ஈரோட்டில் செல்வப்பெருந்தகை பேட்டி
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதி கேட்டு பெறுவோம் என்று ஈரோட்டில் செல்வப்பெருந்தகை கூறினார்.;
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதி கேட்டு பெறுவோம் என்று ஈரோட்டில் செல்வப்பெருந்தகை கூறினார்.
இந்திய தேசிய காங்கிரசுக்கு டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா பவன் திறப்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்ப்பதோடு இந்திய அரசையும் எதிர்த்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த பேச்சு இந்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகின்ற வகையில் இருப்பதாக கூறி, அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள காவல் நிலையத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இன்று (ஜன.22) தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் நடைபெறும் என அறிவித்திருந்தது.
அதன்படி, ஈரோடு காங்கிரஸ் சார்பில் இன்று காலை சூரம்பட்டி 2ம் நம்பர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமை தாங்கினார். பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் நலப் பணிகள், வெளிப்படைத் தன்மையான அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள். 2021ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தல், 2024-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி என தொடர்ந்து வெற்றி வாய்ப்பை மக்கள் வழங்கி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இருக்கிறதா என்று மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து பிரசாரம் செய்வோம். இடைத்தேர்தல் எல்லா ஆட்சியில் வரும் நிலையில் ஜனநாயக அமைப்பில் கட்சிகள் போட்டியிடுவது அந்தந்த கட்சிகள் உரிமை. தமிழகத்தில் ஒரு பைசா கூட செலவில்லாமல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உள்ளனர் .
ஜனநாயக கடமையாற்றுவதில் மக்கள் தான் முடிவு எடுப்பார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனியாக முடிவு செய்ய முடியாது. அதனை தாண்டி தோழமை நலன், இந்திய நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும். அதற்காக தான் ஈரோடு கிழக்கு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். தமிழ்நாடு முழுவதும் கிராம கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இயக்கத்தின் நோக்கம் காமராஜர் ஆட்சி தான். டங்ஸ்டன் மீது முடிவு என்பது மாநில அரசின் அதிகாரத்தில் உள்ளது. ஆனால் பரந்தூர் விமான நிலையம் என்னுடைய தொகுதியில் தான் உள்ளது. அதனால், அந்த பகுதி மக்களோடு இருக்கிறேன். டெல்லி தேர்தலை பொறுத்தவரை அநீதி வீழ்த்தப்பட வேண்டும்.
ஜனநாயக வெற்றி பெற வேண்டும். தந்தை பெரியார் புறக்கணித்து விட்டு அரசியல் செய்ய முடியாது. அவர் (சீமான்) தொட கூடதெல்லாம் தொட்டு விட்டார். அதனால் சீமான் பெரியார் பற்றி பேசியதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.