ஈரோடு: அத்தாணி பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ஈரோடு மாவட்டம் அத்தாணியில் பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
அத்தாணி பவானி ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியையொட்டி செல்லும் பவானி ஆற்றில் இருந்து அந்தியூர், ஆப்பக்கூடல், ஜம்பை, காஞ்சிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அத்தாணி சவுண்டப்பூர் பழைய பாலத்தின் கீழ் செல்லும் பவானி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதனால் ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. இந்த தண்ணீர் தான் பவானி கைகாட்டி பிரிவில் தேக்கி வைக்கப்பட்டு அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனால் கழிவுநீரையே குடிநீராக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால் பவானி ஆறு பாழாவதுடன், பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, கோடை காலத்தில் இந்த பகுதி மட்டுமின்றி ஈரோடு மாவட்ட மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் ஒரு வரப்பிரசாதமாக பவானி ஆறு அமைந்துள்ளது. பொதுமக்கள் குடிப்பதற்கு மட்டுமல்லாமல் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற் கும் பெருமளவு கைகொடுத்து வருகிறது.
ஆனால், அத்தாணியில் கழிவுநீர் நேரடியாக பவானி ஆற்றில் கலக்கும் வகையில் கால் வாய் அமைக்கப்பட்டுள்ளதால் ஆறு மாசடைகிறது. இதுதவிர அந்த பகுதியில் சுற்றித்தி ரியும் பன்றிகள் கழிவுநீர் ஆற்றில் கலக்கும் இடத்தில் உருண்டு புரண்டு வருகின்றன.
மேலும், ஆற்றங்கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆங் காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவை காற்று வீசும் போது பறந்து ஆற்று நீரில் கலந்து விடுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு எங்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அச்சப்படுகிறோம். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.