ஈரோடு: அத்தாணியில் பாஸ்ட் புட் கடை தொழிலாளிக்கு காதில் அரிவாள் வெட்டு: 3 இளைஞர்கள் கைது
ஈரோடு மாவட்டம் அத்தாணியில் பாஸ்ட் புட் கடையில் ஏற்பட்ட தகராறில் கடையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு காதில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக, 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.;
அரிவாள் வெட்டு (பைல் படம்).
அத்தாணியில் பாஸ்ட் புட் கடையில் ஏற்பட்ட தகராறில் கடையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு காதில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக, 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலை அடுத்த அத்தாணி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது 33). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார். இவருடைய ஓட்டலில் அத்தாணி பாடசாலை தெருவை சேர்ந்த அருள்குமார் (33) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கணபதிபாளையம் பிள்ளையார் தெருவை சேர்ந்த அபிஷேக் (22), எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்த பிரதீப்ராஜ் (20), கூகலூர் அர்ச்சனா காலனியை சேர்ந்த பிரகலாதன் (22) ஆகிய 3 பேரும் ஹரிஹரசுதனின் கடைக்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, தகராறு முற்றியதில் அபிஷேக் ஆத்திரம் அடைந்து அரிவாளால் ஹரிஹரசுதனை வெட்ட முயன்றார். இதில், ஹரிஹரசுதன் சற்று விலகியதில், கடை தொழிலாளியான அருள்குமாருக்கு வலது காதில் வெட்டு விழுந்தது.
இதில், காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக், பிரதீப் ராஜ், பிரகலாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.