உலக நீரிழிவு தினத்தை ஒட்டி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி
நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஈரோடு மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி.
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஈரோடு டாக்டர்.மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியானது ஈரோடு குமலன்குட்டை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு டாக்டர்.மோகன்'ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர்.கே.எம். ஜிதேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாரதி வித்யா பவன் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக அரிமா சங்க மண்டல தலைவர் தமிழ்செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய ஈரோடு டாக்டர். மோகன்'ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜிதேந்திரன் கூறியதாவது: நீரழிவு நோய்3 வகைப்படும். வகை -1 சர்க்கரை நோய் முதலாவது வகை எனப்படும். இது குழந்தைகளுக்கு வரக்கூடிய ஒன்றாகும். இதற்கு இன்சுலின் கொடுப்பதன் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இரண்டாவது வகை வகை-2 சர்க்கரை நோய் எனப்படும். இன்று உலகில் பொதுவாக மக்களுக்கு வரக்கூடிய நோய். இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அப்படி இல்லையென்றால் இன்சுலின் அல்லது மாத்திரை எடுத்து கொள்வதன் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மூன்றாவது வகை கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ஒன்றாகும். இது அவர்களுடைய பேறு காலம் முடிந்தவுடன் சரியாகி விடும். நீரிழிவு நோய் இன்று அதிகமாக வருவதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவு பழக்க முறைகளே காரணிகளாகும். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமும் சீரான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நாம் ஆரோக்கியமாக வாழலாம், நீரிழிவு நோய் வராமலும் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.